தினகரன் 27.05.2010
சீராக குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை
சேலம்: சேலத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் குடிநீர் வினியோகம் வழங்க கமிஷனர் பழனிசாமி தலைமையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
குடிநீர் வினியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர் ஐ.எஸ்.ஐ., தரம் உள்ளதாகவும், அதில் 32 சதவீதம் குளோரின் அளவு கண்டிப்பாக இருக்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மட்டும் இருப்பு வைக்கும் வகையில் மட்டுமே வாங்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் பைகளை காற்றுபுகாவண்ணம் சரியான முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தின் கடைசி பகுதியில் குறைந்தபட்சம் குளோரின் அளவான 0.2 பி.பி.எம்., இருக்க வேண்டும் என கமிஷனர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்‘ என்றும் வேண்டுகோள் விடுத்தார்.