தினமலர் 27.01.2010
சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு சீல்: சுகாதாரத் துறை செயலர் பாராட்டு
சென்னை : சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு, “சீல்‘ வைத்த சென்னை மாநகராட்சியின் செயல் பாட்டுக்கு, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்தார்.குடியரசு தினத்தையொட்டி, சென்னை அரசு பொது மருத்துவமனை குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறை சார்பில்,”பழக்க வழக்கங்களும், ஜீரண மண்டல உபாதைகளும்‘ என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தியது.மாநிலம் முழுவதும் இருந்து 48 பேர் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி அபர்ணா, சென்னை மருத்துவ கல்லூரி மாணவி வித்யா, இருங்காட்டுக்கோட்டை கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவி சபிதா ஆகியோரின் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக தேர்வு செய்யப்பட்டன.
நேற்று நடந்த விழாவில், சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவியருக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் விருது மற்றும் நற் சான்றுகளை வழங்கி பேசும்போது, “”மன அழுத்தம் ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா பயிற்சி செய்ய வேண்டும். அரசு பொது மருத்துவ மனை உள் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.தமிழகம் முழுக்க 1,238 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன கருவிகள் வாங்கப் பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மருந்து, மாத்திரைகள் வாங்கப் பட்டுள்ளன.மக்கள், நோய் வராமல் தவிர்க்க நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
சுகாதார துறை செயலர் சுப்புராஜ் பேசும்போது, “”நோய் வராமல் தடுக்க, சுத்தமான உணவு வகைகளை உட் கொள்ள வேண்டும். சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில், மாநகராட்சியினர் அதிரடியாக சோதனை மேற் கொண்டனர். சுகாதாரம் இல்லாத ஓட்டல்களுக்கு, “சீல்‘ வைத்தனர்.தலைமை செயலகத்திலேயே நுழைந்து, அங்கிருந்த சுகாதாரமில் லாத கேன்டீன்களை மூடினர். மாநகராட்சியின் இந்த செயல் பாராட்டத் தக்கது. மாநகராட்சியின் செயல்பாடு ஓட்டல் நடத்துவோருக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும்” என்றார்.அரசு பொது மருத்துவமனையின் டீன் மோகனசுந்தரம், துணை முதல்வர் சுந்தரம், குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறைத் தலைமை டாக்டர் சந்திரமோகன் உள்ளிட் டோர் விழாவில் பங்கேற்றனர்.