தினமலர் 21.01.2010
சுங்ககேட் வளைவில் ஆக்கிரமிப்பு அகற்றினால் சுவர்: நகராட்சி தீர்மானம்
கரூர்: “தாந்தோணி சுங்ககேட் வளைவில் உள்ள சாக்கடை பகுதியில் ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் அகற்றினால், தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று தாந்தோணி நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது. தாந்தோணி நகராட்சி கூட்டம் தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது. கமிஷனர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.
தாந்தோணி நகராட்சியில் 2009-10ல் 12வது நிதிக்குழு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மொத்த ஒதுக்கீடு தொகைக்கு திட்ட விதிமுறைப்படி 50 சதவீதம் தொகை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கும், 25 சதவீதம் கால்வாய் மற்றும் சாலைப் பணிக்கும், 25 சதவீதம் மின்கட்டணம் மற்றும் டேட்டா அபிவிருத்தி பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
சுங்ககேட் நகராட்சி பகுதியில் சுங்ககேட் சாலை திருப்பத்தில் உள்ள சாக்கடையால் பல விபத்து ஏற்படுவதால், சாலையோரம் இரண்டு அடி உயரத்தில் சுவர் அமைக்க நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் கவனத்துக்கு கொண்டுவந்தது. இப்பொருள் மீதான விவாதத்தில், “சம்மந்தப்பட்ட பகுதியில் சாக்கடை ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் அகற்றித்தந்தால், சுவர் கட்டித்தருவது குறித்து முடிவெடுக்க‘ தீர்மானிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஆயுதப்படை குடியிருப்பு அருகே மண் சாலைக்கு தார் சாலை போடுவது குறித்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் ரவி, பாபுகுமார், கண்ணகி, ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.