தினமலர் 22.07.2010
சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி நெல்லை மாநகராட்சியில் இடம் தேர்வு
திருநெல்வேலி : சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்வதை சோதனை முறையில் அமல்படுத்த நெல்லை மாநகராட்சியில் இடம் தேர்வு செய்யப்படுகிறது.
நெல்லை மாநகராட்சிக்கு புதிய பஸ்ஸ்டான்ட், நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டான்ட் மற்றும் முக்கிய தெருக்கள், குடிநீர் வினியோகத்திற்கு மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அத்யாவசிய தேவைக்கேற்ப அதிக மின்னழுத்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லை மாநகராட்சிக்கு தேவையான மின்சாரத்தை சூரிய கதிர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் அமைப்பு எந்திரத்தை சோதனை முறையில் மாநகராட்சியால் தேர்வு செய்யப்படும் ஒரு பகுதியில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனை முறை வெற்றி பெற்றால் பல்வேறு பகுதிகளில் இந்த எந்திரங்களை நிறுவவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநகராட்சி மின்சார தேவைக்கு பயன்படுத்தப்படும்.