செங்கம் நகர சீரமைப்புப் பணிகள் ஆய்வு
செங்கம் நகரில் மேற்கொள்ளப்பட்ட நகர சீரமைப்புப் பணிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் காசி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
செங்கத்தில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நகரமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே தலைமை வகித்தார்.
இதில் செங்கம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டும், துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் சென்று வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கோட்டாட்சியர் காசி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடைபெற்ற பணிகள் குறித்து கோட்டாட்சியர் கேட்டறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செய்ய உத்தரவிட்டார்.
கூட்டத்தில், வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மலையமான்திருமுடிகாரி, வட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனா சங்கர், செங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் பிரேம்குமார், நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் கார்தீபன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, வட்ட வழங்கல் அலுவலர் நித்யானந்தம், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.