செங்கல்பட்டு மக்களுக்கு குடிநீர் வசதி நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி மக்களுக்கு, “”ஒரு வாரத்திற்குள் தேவையான குடிநீர் வசதி செய்து தர வேண்டும்’ ‘என, நகராட்சி ஆணையருக்கு, ஆட்சியர் சித்திரசேனன் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பாலான வார்டுகளில் சரிவர குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என, பொதுமக்கள், ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆட்சியர் சித்திரசேனன், நேற்று காலை, செங்கல்பட்டு நகராட்சியில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர், ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில், வீடு வீடாக சென்று, பொதுமக்களிடம் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
புகார்
அப்போது, பொதுமக்கள், குடிநீர் கட்டணம் முறையாக செலுத்துகிறோம். ஆனால், வீட்டு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கொசு தொல்லை என, சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசனிடம், “ஒரு வாரத்திற்குள் தேவையான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என, உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
அதன் பின், ஆட்சியர் தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி, ஆணையர் (பொறுப்பு) கணேசன், நகராட்சி தலைவர் அன்புசெல்வன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும், முழுமையாக வசூலிக்க வேண்டும். வரும், 30ம் தேதிக்குள் அனைத்து வரிகளையும் வசூலிக்க வேண்டும். வரி வசூல் செய்யவில்லை என்றால், வருவாய் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால், குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
வணிக வளாகங்களை ஆய்வு செய்து, வரி விதிப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட வேண்டும். அனைத்து வரிகளையும் வசுல் செய்தால், நகராட்சிக்கு, 4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த நிதியில் அடிப்படை வசதிகள் செய்து கொள்ளலாம். நகராட்சி தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள, கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில், 8,000க்கும் மேற்பட்டோர், அரசு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு நகராட்சி மூலம், சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. அவர்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை. அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.