தினமணி 01.07.2013
தினமணி 01.07.2013
செஞ்சி நகரில் லாரிகளில் குடிநீர் விநியோகம்
செஞ்சி நகரின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க,
லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதென, வெள்ளிக்கிழமை நடைபெற்ற
பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செஞ்சி நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மாதத்தில் மூன்று
முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடும்
பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது
தொடர்பாக செஞ்சி பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம், வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செஞ்சிமஸ்தான் தலைமை வகித்தார். செயல்
அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், செஞ்சி பேரூராட்சியில்
புதிய குடிநீர் திட்டம் மற்றும் பழைய குடிநீர் திட்டத்தில் உள்ள 7
கிணறுகளுள் 5 கிணறுகளில் குடிநீர் ஆதாரம் முற்றிலும் இல்லை. மீதமுள்ள 2
கிணறுகளில் சுரக்கும் தண்ணீர் மாதத்திற்கு 5 நாள்கள் வழங்கும் நிலை உள்ளது.
மேலும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க திருக்கோவிலூர் நெற்குணம் கிணறு
அருகில் புதியதாக 5 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கும் பணி பொதுநிதியில்
இருந்து நடைபெற உள்ளது.
தவிர, குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சமாளிக்க செஞ்சி பேரூராட்சி
பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கலாம் என முடிவு
செய்யப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.