தினமலர் 04.05.2010
சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி குழு அமைப்பு
மதுரை: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைக்க உரிமம் பெற்றுள்ள வியாபாரிகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தனி குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட், விரைவில் மாட்டுத்தாவணியில் கட்டப்படும் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. புதிய இடத்தில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய மார்க்கெட்டில் கடை ஏற்கனவே உரிமம் பெற்றுள்ளவர்களுக்கு புதிய இடத்தில் கடை வைக்க முன்னுரிமை தரப்படும்.புதிய இடத்திற்கு செல்வோர், செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை நிர்ணயிப்பதில் முடிவு ஏற்படாததால், மார்க்கெட் இடம் மாறுவதில் இழுபறி ஏற்பட்டது.
தற்போது இதில் உடன்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.தற்போதைய சென்ட்ரல் மார்க்கெட்டில் புதினா, கறிவேப்பிலை, மல்லி, பச்சை மிளகாய் வியாபாரிகளுக்கு 62, எம்.ஜி.ஆர்., அனைத்து காய்கறி சில்லரை வியாபாரிகள் நலச்சங்க வியாபாரிகளுக்கு 65, வாழை இலை சில்லரை வியாபாரிகள் சங்கத்தினருக்கு 35, முத்துராமலிங்கம் நாளங்காடி மேட்டுப்பகுதி வியாபாரிகளுக்கு 25, சென்ட்ரல் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் நலச்சங்கத்தினருக்கு 126, சென்ட்ரல் மார்க்கெட் தக்காளி மற்றும் சீமைக்காய் வியாபாரிகளுக்கு 120, வடக்கு ஆவணி மூலவீதி மேட்டுப்பகுதி சில்லரை காய்கனி வியாபாரிகளுக்கு 382 கடைகள் இருக்கின்றன.
இவை தவிர, மாநகராட்சி பட்டியலில் இல்லாத மதுரை மீனாட்சி தக்காளி நாட்டு காய்கறி மொத்த வியாபாரிகள் நலச்சங்கத்திற்கு 70, சென்ட்ரல் மார்க்கெட் உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்கத்திற்கு 30, இஞ்சி, கருவேப்பிலை, மல்லி வியாபாரிகள் நலச்சங்கத்திற்கு 25, அனைத்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்திற்கு 150 கடைகள் உள்ளன. மேலும் சில சிறு சங்கங்களுக்கும் சேர்த்து மொத்தம் 1235 கடைகள் இயங்குகின்றன. இவர்களுக்கு புதிய மார்க்கெட்டில் கடை ஒதுக்கும் முன், தற்போதைய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைப்பதற்காக உரிமம் பெற்றுள்ளவர்களின் உண்மைத் தன்மையை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இதற்காக செயற்பொறியாளர்கள் சந்திரசேகர், ராஜேந்திரன், உதவி கமிஷனர் ராஜகாந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அறிக்கை கொடுத்த பிறகு வியாபாரிகளுக்கு புதிய இடத்தில் கடை ஒதுக்கப்படும்.