மாலைமலர் 24.09.2009
சென்னை அருகே புதிய மாநகராட்சிகள் அமைக்கப்படுமா?-கருணாநிதி ஆய்வு
சென்னை, செப்.24-
சென்னை மாநகரின் மிக வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மக்களுக்கு திட்டங்கள் நல்ல முறையில் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும், சென்னை அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டது.
இது பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, கடந்த 2007-ல், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் (சி.எம்.டி.ஏ.) துணைத்தலைவர், வருவாய் நிர்வாகத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.
இதற்கிடையே, சென்னை அருகே தாம்பரம், அம்பத்தூர் ஆகிய 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டது. இது பற்றி சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் கருத்து கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழு (வருவாய் நிர்வாகத் துறை சிறப்பு ஆணையர் டாக்டர் சுந்தரதேவன், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர்), தனது அறிக்கையை துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆகஸ்ட் 18-ந் தேதி சமர்ப்பித்தது.
அதில், சென்னை அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்காமல், சென்னை மாநகராட்சியின் எல்லையை மேலும் நன்றாக அதிகரிக்கலாம் என்றும்; சென்னை மாநகராட்சியின் எல்லையை சிறிய அளவில் அதிகரித்துவிட்டு, முன்பு கருத்தில் கொள்ளப்பட்ட அம்பத்தூருக்கு பதிலாக ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாநகராட்சியையும், தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என்றும் 2 பரிந்துரைகள் சொல்லப்பட்டிருந்தன.
இந்தநிலையில், சென்னை அருகே புதிய மாநகராட்சி அமைப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளை முதல்–அமைச்சர் கருணாநிதி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அந்த பரிந்துரைகள் பற்றி, கணினி வழிகாட்சி மூலம் (பவர்பாயிண்ட்) சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விரிவாக விளக்கிக் கூறினார்கள். புதிய மாநகராட்சி அமைப்பது தொடர்பான சாதக, பாதகங்களை முதல்–அமைச்சருக்கு அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். இறுதியில், இது பற்றி, நகராட்சி நிர்வாகத்துறையினர் விரிவாக ஆய்வு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் 2011-ம் ஆண்டுதான் முடிவடைகிறது. அதனால் இப்போதைக்கே புதிய மாநகராட்சி ஏற்படுத்திவிட முடியாது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், புதிய மாநகராட்சி அமைப்பதாக இருந்தால், அதற்கான முன்னேற்பாடுகளை இடைப்பட்ட காலத்தில் செய்து வைத்துக் கொள்வது என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் சூசன் மேத்ï, உறுப்பினர் செயலாளர் விக்ரம் கபூர், வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன், ஊரகவளர்ச்சி–ஊராட்சித் துறை செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி, வீட்டுவசதித்துறை செயலாளர் சுர்ஜித் கே.சவுத்ரி, நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.