தினகரன் 30.12.2009
சென்னை பெருநகர மாநகராட்சி

ர் சென்னை பெருநகர் பகுதியின் 800 சதுர கி.மீ. பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சியின் பரப்பளவை விரிவாக்கலாம். அதை ‘சென்னை பெருநகர மாநகராட்சி’ (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) என்று அழைக்கலாம் என்பது முதல் பரிந்துரை.ர் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மற்றும் ஆலந்தூர் நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சி பரப்பளவை 426 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யலாம். ஆவடி (168 ச.கி.மீ.) மற்றும் தாம்பரம் (218 ச.கி.மீ.) ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என்பது இரண்டாவது பரிந்துரை.
இந்த பரிந்துரைகள் குறித்து அரசு மட்டத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் இரண்டாவது பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரணம், பெரியதொரு மாநகராட்சியை அமைப்பதால், நன்மைகள் அதிகம் என்று அரசு கருதுகிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்க உள்ள பகுதிகள் ‘சென்னை’ என்ற அடையாளத்தை பெறும். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவும். கட்டமைப்பு வசதிகளை ஒட்டுமொத்தமாக திட்டமிட முடியும். நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சரியான அளவில் பயன்படுத்தி வளர்ச்சியை திட்டமிடலாம். இந்தியாவில், மக்கள் தொகை அடிப்படையில் நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தரவரிசைப்படுத்துதல், நிதி முதலீடுகளை ஈர்ப்பதற்கு முக்கியம் என்று அரசு கருதுவதால், முதல் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை ஆவடி, சென்னை தாம்பரம் என்ற புதிய மாநகராட்சிகள் முடிவை தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படாத வகையில் பின்னர் அறிவிப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இப்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு முடிவடைந்தவுடன், புதிய மாநகராட்சிகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்படும். இப்போதைய வார்டுகளும் மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். வார்டுகள், மண்டலங்கள் பிரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமிக்கப்படவும், ஆறு மாதத்திற்குள் அவர் அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.இப்போதுள்ள சென்னை மாநகராட்சியுடன் இணையும் நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகள் விவரம்: கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம்&புழுதிவாக்கம் ஆகிய 9 நகராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைகிறது. சின்ன சேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய 8 பேரூராட்சிகள். இடையஞ்சாவடி (மீஞ்சூர் ஒன்றியம்), சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம் (புழல் ஒன்றியம்), நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம் (வில்லிவாக்கம் ஒன்றியம்), முகலிவாக்கம், மணப்பாக்கம் (குன்றத்தூர் ஒன்றியம்), கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி (செயின்ட் தாமஸ் மவுன்ட் ஒன்றியம்) ஆகிய 25 ஊராட்சிகள்.