தினமணி 05.02.2010
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்காக வியாழக்கிழமை யோகா பயிற்சி தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெண் ஊழியர்கள். சென்னை, பிப். 4:சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கான 6 நாள் யோகா பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. ரூ. 18 லட்சம் செலவில் அளிக்கப்படும் இந்த பயிற்சியை மேயர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பணிபுரியும் மன்றத்துறை, பொதுத்துறை, மின்சாரத் துறை, கல்வித் துறை, இயந்திர பொறியியல் துறை, திடக் கழிவு மேலாண்மைத் துறை ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த 250 ஊழியர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமும் 2 மணி நேரம் அளிக்கப்படும் இந்த யோகா பயிற்சியில் கை பயிற்சி, கால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கண் பயிற்சி, கபாலபதி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் இதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளும் பலப்படும். மன அமைதியும், புரிந்து கொள்ளும் திறனும், ஞாபக சக்தியும் கூடும்.
மருத்துவப் பரிசோதனை அட்டை: யோகா பயிற்சியுடன், மருத்துவப் பரிசோதனையும் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநகராட்சி ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்கப்பட்டது.
இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ அட்டையில், அவர்கள் குறித்த மருத்துவக் குறிப்புகள் இடம்பெறும். மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, யூரியா, எலும்பு அடர்த்தி, தோல் வியாதி, வாய், கண், மூக்கு, நரம்பு மண்டலம், சிறுநீரகம், சுவாச மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.