தினமலர் 04.02.2010
சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னை : ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், “நோட்டீஸ்‘ அனுப்பி உள்ளது. சென்னை ஓட்டேரி, மங்களபுரியைச் சேர்ந் தவர் ரமேஷ். இவர் மகள் மதுமிதா. வீட்டிற்கு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 14ம் தேதி பள்ளிக்கு சென்ற மதுமிதா, குறும்பு செய்ததாக கூறி, ஆசிரியை ரேணுகா அடித்தார். அப்போது, அவர் கையில் அணிந் திருந்த கண்ணாடி வளையல் உடைந்து, மதுமிதாவின் வலது கண்ணில் பட்டது. இதில், மாணவியின் கண்பார்வை பாதிக்கப் பட்டது. இதுபற்றி கடந்த 31ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அச்செய்தியை அடிப்படையாக கொண்டு, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் வெங்கடாசலமூர்த்தி, உறுப்பினர்கள் செல்வகுமார், மாரியப்பன் மற்றும் பரமசிவம் ஆகியோர், இச்சம்பவம் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, “நோட்டீஸ்‘ அனுப்பி உள்ளனர்.