சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகள், மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (1 ஆண்டு), மின் பணியாளர் (2 ஆண்டுகள்), கம்மியர் மோட்டார் வாகனம் (2 ஆண்டுகள்), ஃபிட்டர் (2 ஆண்டுகள்), பிளம்பர் (1 ஆண்டு) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதில், பிளம்பர் பயிற்சியைத் தவிர மற்ற பயிற்சிகளில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளம்பர் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அனைத்து படிப்புகளிலும் சேர்த்து மொத்தம் 166 இடங்கள் உள்ளன.
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் அரசு விதிப்படி சேர்க்கப்படுவார்கள்.
பயிற்சியில் 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பயிற்சியில் சேருபவர்களுக்கு சீருடை இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பங்கள், “சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி நகர், ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, சென்னை – 14′ என்ற முகவரியில் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி ஜூன் 28. மேலும், விவரங்களுக்கு 044 28473117 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.