மாலை மலர் 17.08.2013

ஜெயலலிதாவால் புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம்
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரத் தொடங்கியது.
கோடையில் வீராணம் ஏரி வறண்டதால் சென்னைக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது.
தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு இருப்பதால் வீராணத்துக்கு தண்ணீர்
வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, வீராணம் ஏரியில் இருந்து இன்று முதல்
சென்னைக்கு தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி
இன்று காலை 11 மணி அளவில் வீராணத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர்
திறக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எம்.சி.சம்பத் ஆகியோர்
கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் குடிநீர்
வாரிய நிர்வாக இயக்குனர் சந்திர மோகன், கடலூர் மாவட்ட கலெக்டர்
கிலோஸ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வீராணம் ஏரியில்
திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய் மூலம் சென்னை வருகிறது. முதலில் 15 கிலோ
மீட்டர் தூரத்தில் நெய்வேலி அருகில் இருக்கும் வடக்குத்து என்ற இடத்துக்கு
வருகிறது. அங்கிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள காடாம்புளியூர் கொண்டு
வரப்படும். வீராணம் தண்ணீர் அங்கு சுத்திகரிக்கப்படுகிறது.
பின்னர்
சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் குழாயில் பயணிக்கும் வீராணம் குடிநீர்
சென்னை வந்து சேருகிறது. இங்கு போரூர், கே.கே.நகர், சூளைமேடு, வளசரவாக்கம்,
ஆலந்தூர் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வேளச்சேரி,
பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு நெம்மேலியில் இருந்து கடல்நீரை
சுத்திகரித்து வரும் குடிநீருடன் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது.
வீராணத்தில்
இருந்து திறக்கப்பட்ட குடிநீர் இன்று மாலை சென்னை வந்து சேரும் என்று
அதிகாரி ஒருவர் கூறினார். வீராணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 180
மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது.