சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்படும்: அமைச்சர் கே.பி. முனுசாமி
சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த நகராட்சி நிர்வாகம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. ஆனாலும், குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் சில தனியார் நிறுவனங்கள் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து மண்டலங்களிலும் துப்புரவுப் பணிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படும்.
இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம் சீரமைப்புப் பணி 2013-ல் முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மளிகை, விக்டோரியா பொது அரங்கம் ஆகியவை மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இதுவரை ரூ. 11.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2013-ல் ரிப்பன் மாளிகைக்கு நூற்றாண்டு விழா என்பதால் இப்பணிகள் 2013-ல் முடிக்கப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.