தினமணி 24.09.2009
சேலம் மாநகராட்சி: குடிநீர் பராமரிப்புக்கு வாகனம்
சேலம், செப். 23: சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிக்காக, “புளு பிரிகேட்‘ என்ற நவீன வாகனம் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொகையை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளது.
இந்த வாகனத்தில் உள்ள கருவிகள், எலெக்ட்ரானிக் சென்சார் மூலம் பிரதான குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை எளிதில் கண்டுபிடிக்கும். குடிநீரின் தரத்தை சோதனை செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், குளோரின் அளவை சோதனை செய்யும் கருவிகள் அனைத்தும் இந்த வாகனத்தில் உள்ளன.
தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஏணி, குடிநீர் கட்டணம் வசூலிப்பதற்கு ஏதுவாக இணையதள வசதியுடன் கூடிய கணினி, தகவல் பரிமாற்றத்துக்கான வயர்லெஸ் கருவி, ஒலிப் பெருக்கிகளும் இதில் உள்ளன. மாநகரில் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் கசிவுகளை நிவர்த்தி செய்யவும், கசிவினை எளிதாகக் கண்டறியவும், நடமாடும் ஆய்வகமாகவும் இந்த வாகனத்தைப் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.