தினமலர் 30.04.2010
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் ‘கட்‘
சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏப்., 30, மே 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், மேட்டூரில் இருந்து வரும் குடிநீர் மெயின் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் குடிநீர் கசிவு போன்றவற்றை சீர் செய்யும் பணி மற்றும் நீரேற்று நிலையத்தில் தூர் வாரும் பணி ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வரும் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தொங்கும் பூங்கா, அய்யந்திருமாளிகை, அம்மாபேட்டை மேல்நிலை குடிநீர் டேங்க், கீழ்நிலை குடிநீர் டேங்க், பொன்னம்மாபேட்டை, எருமாபாளையம், கிச்சிப்பாளையம், குகை, கருங்கல்பட்டி ஆகிய மேல்நிலைத்தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வரும் பகுதிகளுக்கு ஏப்., 30, மே 1 ஆகிய தேதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.