தினத்தந்தி 05.08.2013
சேலம் மாநகராட்சி பகுதியில், அனுமதியின்றி மரம் வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ஆணையாளர் அசோகன் தகவல்
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன்
தெரிவித்துள்ளார்.
மரங்களை பாதுகாக்க
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்
ஏற்காட்டில் மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை தடை செய்துள்ளது. மேற்படி
மழைப்பிரதேசத்தினை பசுமைப் பகுதிகளாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குள் குடியிருப்பு பகுதியில் உள்ள
சாலைகள், தனியார் நிலங்கள் ஆகியவற்றில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டியது
மாநகராட்சியின் முக்கிய கடமையாக உள்ளது.அவ்வாறு மரங்கள் பாதுகாக்கப்பட்டால்
தான் மழை வளம் கிடைக்கும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு
மாநகரம் செழுமையாக இருக்கும்.
சட்டப்படி நடவடிக்கை
இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள்
மற்றும் தனியார் நிலங்களில் உள்ள உயிருடன் அல்லது பட்டுபோன மரங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றாலோ, மின் கம்பிகள் மீது மோதுவதாக
இருந்தாலோ, குடியிருப்பு கட்டிடங்கள் மீது விழுந்தாலோ அதனை அந்த பகுதி
மக்களோ அல்லது கட்டிட உரிமையாளர்களோ தன்னிச்சையாக வெட்டி அப்புறப்படுத்தக்
கூடாது. அவ்வாறு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை மாநகராட்சிக்கு
விண்ணப்பம் செய்தால் வருவாய்துறையின் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி வெட்டி
அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும். மேற்படி உரிய அனுமதி இன்றி மரங்களை
வெட்டும் நபர்கள் மீது போலீஸ் துறை மூலம் சட்டப்படி வழக்கு பதிவு செய்து
உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாநகரப் பகுதியில் வாழும்
பொதுமக்கள் மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க
வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.