தினமலர் 06.10.2010
சேலம் மாநகராட்சியில் பார்வையாளர் மாடத்துக்கு செல்லஅனுமதி மறுப்பு
சேலம்: சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் நடக்கும் மாமன்ற கூட்ட விவாதங்களை நேரடியாக பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பார்வையாளர் மாடத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த 1963 டிச., 31ல், தமிழ்நாடு ஸ்தல ஸ்தாபன அமைச்சராக பொறுப்பு வகித்த மஜீத் என்பவர் தற்போதுள்ள மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். புதிய கட்டிடம் ராமகிருஷ்ணன் நகர் மன்றம் என்று அழைக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., முதல்வராக பொறுப்பு வகித்த போது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராஜாராம் என்பவர் எடுத்த முயற்சியால், சேலம் நகர்மன்ற கட்டிடத்துக்கு ராஜாஜி நகர் மன்ற நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போதுள்ள கணக்குப்பிரிவு அலுவலகத்தில் மாதம் ஒருமுறை நகர்மன்ற கூட்டம் நடத்தப்பட்டது.
நகர் மன்ற தலைவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இடப்பற்றாக்குறையால், மன்ற கூட்ட விவாதம் அருகில் உள்ள புதிய கட்டிடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.நகராட்சியின் மைய அலுவலகத்தில் நடக்கும் நகர் மன்ற கூட்டங்களை பொதுமக்கள் நேரடியாக பார்க்க பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டது. நகரவாசிகள் மாதந்தோறும் நடக்கும் கூட்டங்களை நேரடியாக பார்வையிட்டு வந்தனர். பொதுமக்கள் மன்ற கூட்டங்களுக்கு வந்ததால், வார்டு பிரதிநிதிகள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.கடந்த 1994 ஜூன் 1 ம் தேதி சேலம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சேலம் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க., வை சேர்ந்த சூடாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மேயராக பொறுப்பு வகித்த ஆரம்பகாலத்தில் பொதுமக்கள் பார்வையாளர் மாடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஒருமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் செய்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அன்று முதல் பார்வையாளர் மாடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சூடாமணிக்கு பிறகு, 2001-06 வரை அ.தி.மு.க., வை சேர்ந்த சுரேஷ்குமார் மேயராக பொறுப்பு வகித்தார். அவரது காலத்திலும் பொதுமக்கள், பார்வையாளர் மாடத்துக்குசெல்ல அனுமதிக்கப்படவில்லை.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., வை சேர்ந்த ரேகாபிரியதர்ஷினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டாக அவரும் பார்வையாளர் மாடத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் நடக்கும் போது, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமே மன்ற கூட்டத்துக்கு செல்ல போலீஸார் அனுமதியளிக்கின்றனர்.மன்ற கூட்டத்தை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வரும் பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களையும் போலீஸார் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மன்ற கூட்டம் மட்டுமின்றி பட்ஜெட் கூட்டம் நடக்கும் போதும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.