தினத்தந்தி 13.02.2014
ஜெயலலிதா தொடங்கி வைத்த குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சி
மாநகரில் மேலும் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

திருச்சி மாநகராட்சியில் ரூ.221 கோடி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை
முதல் –அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன்
மூலம் மேலும் ஒரு லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் தினமும்
ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு
உள்ளது.
குடிநீர் அபிவிருத்தி திட்டம்
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு
திருச்சி மாநகராட்சி பகுதியில் ஜப்பான் பன்னாட்டு கழக நிதி உதவியுடன்
ரூ.221 கோடியே 42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மாநகராட்சி குடிநீர்
அபிவிருத்தி திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக நகரின்
பல்வேறு பகுதிகளில் 37 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டு
உள்ளன. 79 கி.மீ நீளத்திற்கு பிரதான உந்து குழாய்களும், 355 கி.மீ
நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்களும் பதிக்கப்பட்டு உள்ளன. குடிநீர்
உறிஞ்சி எடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் ராட்சத ஆழ்துளை
கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்
இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல் –அமைச்சர் ஜெயலலிதா நேற்று
சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக காஜாமலை
காலனி அரசு ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வளாகத்தில் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில்
மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மேயர் ஜெயா, பரஞ்சோதி எம்.எல்.ஏ,
மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக், கோட்ட தலைவர்கள்
சீனிவாசன், மனோகரன், கவுன்சிலர்கள் அய்யப்பன், கலைவாணன், ஏர்போர்ட் விஜி,
மகாலட்சுமி மலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் –அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பில் சிலர்
பேசினார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய்களில் பெண்கள்
குடங்களில் தண்ணீர் பிடித்து சென்றார்கள்.
தினமும் 135 லிட்டர் தண்ணீர்
முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததை தொடர்ந்து 37 மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டிகளிலும் நேற்று உடனடியாக தண்ணீர் ஏற்றப்பட்டது. இதன்
மூலம் திருச்சி நகர மக்களுக்கு இனி தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர்
குடிநீர் வழங்கப்படும் என்றும், இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒரு லட்சம்
புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.