தினமலர் 28.06.2010
டாஸ்மாக்‘ பார்களில் திடீர் ஆய்வு சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை
திருப்பூர்: திருப்பூரில் இயங்கும் “டாஸ்மக்‘ மதுக்கடை பார்களில், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சியில் உரிமம் பெறாமல் இயங்கிய பார்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி எல்லையில் இயங்கும் “டாஸ்மாக்‘ பார்கள், மாநகராட்சியிலும் உரிமம் பெற்று, அதன் விதிமுறைப்படி இயங்க வேண்டும். திருப்பூர் சுகாதார ஆய்வாளர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், மாநகராட்சி சுகாதாரத்துறை உரிமம் பெறாமல் இயங்குவது கண்டறியப்பட்டது.சாமுண்டிபுரம், கொங்கு மெயின் ரோடு, அவிநாசி ரோடு, எம்.எஸ்., நகர், அங்கேரிபாளையம் ரோடு பகுதிகளில் உள்ள ஏழு பார்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்ட பார்களில், மாநகராட்சி உரிமம் பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டது.பார்களில் இருந்த போலி சோடா, காலாவதியான குளிர்பானங்கள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதி மறுக்கப்பட்டுள்ள “ஒன்யூஸ்‘ டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அப்போது, “மாநகராட்சி சுகாதாரத்துறையில் உரிமம் பெற்று, அதில் உள்ள விதிமுறைப்படியே கடையை நடத்த வேண்டும்‘ என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில், ஆய்வாளர்கள் முருகன், சாமிநாதன், தங்கவேல், வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.