தினமலர் 22.07.2010
டிரைவர்கள் பணி நிரந்தரம்: மேயர் அறிவிப்பு
சென்னை : “”சென்னை மாநகராட்சியில் பணிபுரியும், தற்காலிக டிரைவர்கள் 90 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்,” என மேயர் சுப்ரமணியன் பேசினார்.
சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களை சரி செய்வதற்கு 20 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு சாலை உருளைகளையும், 18 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட கனரக கிராப்ளர் உடன் கூடிய இரண்டு எஸ்கலேட்டர் வாகனங்கள் ரூபாய் 94 லட்சத்திலும், சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.புதுப்பேட்டை மாநகராட்சி டிப்போவில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன், இந்த வாகனங்களின் சாவிகளை டிரைவர்களிடம் ஒப்படைத்து பேசும்போது, “”மாநாகராட்சியில் பணியாற்றிய 2,025 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.அதுபோல் பல ஆண்டுகளாக மாநகராட்சியில் தற்காலிக டிரைவர்களாக வேலை பார்க்கும் 28 பேரை பணி நிரந்தரம் செய்ய துணை முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் அனுமதியளித்துள்ளார். மேலும் 62 தற்காலிக டிரைவர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்,” என்றார்.இந்நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், பணிகள் நிலைக்குழு தலைவர் சுரேஷ்குமார், மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.