தினமணி 25.09.2009
டீத்தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை
ஈரோடு, செப். 24: டீத்தூளில் கலப்படம் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஈரோடு சுகாதாரத்துறை துணை இயக்குநர் கோ.ரகுநாதன்.
டீத்தூளில் கலப்படம் செய்வதாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையொட்டி, வணிக நிறுவனங்களில் விற்கப்படும் டீத்தூளின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
இதன்படி கோ.ரகுநாதன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
டீத்துள் விற்கப்படும் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதுகுறித்து ரகுநாதன் கூறியது: ஏற்கெனவே பால் பொருள்கள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், உணவு எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தரமுள்ளவையாக விற்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போது டீத்தூள் விற்பனை மையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. புளியங்கொட்டை பவுடர், மரத்தூள், முந்திரிதோல் பவுடர் ஆகியவை டீத்தூளில் கலப்படம் செய்யப்படுகின்றன. மேலும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூளை, வண்ணப் பொடிகள் கலந்து மீண்டும் விற்க கொண்டு வருகின்றனர். இவற்றால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.
கலப்படம் செய்வோர் மீது சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.
ஈரோடு, கோபி, சத்தி வட்டங்களில் உள்ள 10 வட்டாரங்களில் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சந்தேகத்துக்குரிய டீத்தூளின் மாதிரிகள்,ஆய்வு செய்யப்படுவதற்காக சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.
கலப்படம் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்படம் செய்யப்படுவது தெரிய வந்தால் பொதுமக்கள் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எவ்வகையிலும் நுகர்வோர் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.