தனியார் பள்ளிக்கு இணையான கல்வி மாநகராட்சி கல்வி அலுவலர் அறிவுரை
கோவை:”மாநகராட்சி பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பிக்க வேண்டும்’ என, துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா தலைமையில் நடந்தது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 41 பேரும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 15 பேரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கல்வி அலுவலர் வசந்தா பேசியதாவது:கோவை மாநகராட்சியில் மொத்தம் 83 பள்ளிகள் உள்ளன. அதில், 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒப்பணக்கார வீதி, வெங்கிட்டாபுரம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பலத்த போட்டி நிலவுகிறது.
வரும் ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண் அதிகம் பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதனால், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு துவக்கப்பள்ளியில் இருந்து தரமான கல்வி வழங்க வேண்டும். அரசு புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் வீடு தேடிச்சென்று பள்ளி சேர்க்கையை துவங்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.
பள்ளிகளில் குடிநீர், கழிப்பிட வசதிகளை உறுதி படுத்த வேண்டும். போதுமான அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி, சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும். மாதாந்திர தேர்வு நடத்தி, தேர்ச்சி நிலையை பெற்றோருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி போதிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபற்றி பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான், மாநகராட்சி பள்ளிகளை மக்கள் தேடி வருவார்கள்.இவ்வாறு, வசந்தா அறிவுரை கூறினார்.