தினமணி 19.09.2009
தமிழக எல்லையை தொட்டது கிருஷ்ணா நீர்: மலர் தூவி வரவேற்பு
திருவள்ளூர், செப். 18: ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தது.
தெலுங்கு கங்கா நதிநீர் திட்டப்படி கண்டலேறு அணை நிரம்பும் போது உபரி நீர் ஆண்டு தோறும் அங்கிருந்து திறந்துவிடப்பட்டு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வழியாக பூண்டி நீர்தேக்கத்தை வந்தடையும்.
ஆந்திராவில் பெய்த தொடர் மழையின் காரணமாக கண்டலேறு அணையின் நிரம்பியதால் உபரி நீர் செப்டம்பர்-15-ம் தேதி அங்கு திறந்துவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை பகல் 3 மணி அளவில் தமிழக எல்லையோர பகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்ட் பகுதியில் தமிழக ஆந்திர அதிகாரிகள் காத்திருந்தனர்.
ஆனால், மாலை 6.30 மணி அளவில் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைப் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது தமிழக அதிகாரிகளான பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், கிருஷ்ணா குடிநீர் திட்ட செயற் பொறியாளர் ஹேமராஜ், சென்னை குடிநீர் திட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளிதரராவ், செயற்பொறியாளர் கண்ணன், சுப்பிரமணியம் உட்பட தமிழக அதிகாரிகள் கிருஷ்ணா நதி நீரை தமிழகத்தில் மலர் தூவி வரவேற்றனர்.
அப்போது, ஆந்திர அதிகாரிகளான தெலுங்கு கங்கா நதி நீர் திட்ட காளஹஸ்தி வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியம், செயற்பொறியாளர் கருணாகரராவ் உடனிருந்தார்கள்.
கண்டலேறு அணையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி 1500 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் 152 கிலோ மீட்டர் கடந்து
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் பகுதியில் கிருஷ்ணா நதி நீர் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் வந்தது.
7 மணி அளவில் 40 கன அடி நீர் வந்தது என, கிருஷ்ணா கால்வாய் திட்ட செயற்பொறியாளர் கருணாகரராவ் தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வழியாக தமிழகத்தில் நுழைந்த கிருஷ்ணா நதி நீர் இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி நீர் தேக்கத்தை சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.
தற்போது, பூண்டி ஏரியில் 123 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணையின் நீர் மட்ட உயரம் 35 அடி ஆகும்.
தற்போது 18.26 அடி அளவே நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் வருவதைத் தொடர்ந்து பூண்டி ஏரியின் நீர்மட்ட அளவு உயரும் என எதிர்பார்கப்படுகிறது.
இன்னும் சில நாள்களில் பூண்டி அணையில் இருந்து இணைப்புக் கால்வாய் மூலம் சென்னைக்கு குடி நீர் வழங்கும் புழல் ஏரிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதென, தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.