தமிழகத்துக்கு ஸ்மார்ட் நகரங்களை எங்கு அமைக்கலாம்?- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை
நாட்டில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புது டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், தமிழக உயரதிகாரி ஒருவர் பங்கேற்கிறார்.
இந்தியாவை வளர்ந்த நாடுகளுக்கு நிகராக மாற்றும் நோக்கில் நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை ரூ.7060 கோடியில் உருவாக்க, மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு திட்டம் வகுத்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் பொன்னேரியில் ஸ்மார்ட் நகரம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அது தொடர்பான தெளிவான அறிவிப்பு வெளிவராததால் மாநில அரசுகள் குழப்பத்தில் இருந்தன. ஸ்மார்ட் நகரம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு அதற்கான அடுத்தக்கட்ட ஆலோசனையை நடத்த முடிவெடுத்து அனைத்து மாநிலங்களும் பங்கேற்கக் கூடிய ஆலோசனைக் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஏற்பாடு செய்துள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் உயரதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் தமிழக நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி பங்கேற்கிறார்.
கடந்த வாரம், முதல்வரை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்தித்தபோது, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளிலும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:-
புது டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், மத்திய அரசு, தான் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம் தொடர்பாக தயாரித்துள்ள வரைவு அறிக்கையைப் பற்றி மாநில அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதனால் அவர்கள் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையிலேயே நமது அடுத்த முடிவு அமையும்.
எனினும், பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது தொடர்பான முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கி மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் வெளியான தகவல். எனினும், தமிழகத்தில் 12 இடங்களில் அமைக்கப்படவேண்டுஅ என்பதே நமது எதிர்பார்ப்பு. அதேநேரத்தில் புதிதாக ஒருஇடத்தில் உருவாக்குவதை நாம் விரும்பவில்லை என்றனர்.