தினமலர் 22.06.2010
தமிழில் இடம்பெறாத பெயர் பலகைகள் அகற்றம்! கெடு முடிந்ததால் மாநகராட்சி அதிரடி…
சென்னை:வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க, மாநகராட்சியினால் அளிக்கப்பட்ட கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்ததால், ஆங்கில மொழியிலிருந்த பெயர் பலகைகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னை நகரிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க மேயர் வேண்டுகோள் விடுத்தார். ஏப்., மற்றும் மே மாதங்களுக்குள் தமிழ்ப் பிரதானமாக இருக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும், இதை பின்பற்றாத நிறுவனங்களின் பெயர் பலகைகள் அகற்றப்படுமென, மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஜூன் மாதம் 20ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கெடுநாள் முடிந்த நிலையில், நேற்று மேயர் சுப்ரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, எதிர்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் அண்ணாசாலைக்கு வந்து சிந்தாரிப்பேட்டை, வேலஸ் சாலையிலிருந்த வணிக நிறுவனங்களில் தமிழ் இடம்பெறாத பெயர் பலகைகளை தொழிலாளர்களை கொண்டு அகற்றினர். அப்போது மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: தமிழில் இடம்பெறாத பெயர் பலகைகள் மாநகராட்சியினர் படிப்படியாக அகற்றுவர். மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று பெயர் பலகைகளை மாற்றியவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் நன்றி. மாநகராட்சியின் 10 மண்டலங்களிலும் தமிழில் இடம் பெறாத பெயர் பலகைகளை அந்த மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு மேயர் கூறினார். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில், 20க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களிலிருந்த, தமிழில் இடம்பெறாத பலகைகள் அகற்றப்பட்டன. அரும்பாக்கம் பகுதியில் 17 கடைகளிலும், விருகம்பாக்கம் பகுதியில் மட்டும் 15 கடைகளிலும் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கான பணியில் கீழ்ப்பாக்கம் மண்டல மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். மேலும், அண்ணாசாலை, பாரிமுனை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம், அண்ணாநகர், மயிலாப்பூர், அடையார் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில், நேற்று மட்டும் தமிழ் இடம்பெறாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆலந்தூர் ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் எம்.கே.என்., சாலை, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளை ஆங்கிலத்தில் வைத்துள்ளன. இதையடுத்து, ஆலந்தூர் நகராட்சி தலைவர் துரைவேலு மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆலந்தூர் எம்.கே.என்., சாலையில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத போர்டுகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.