தினமணி 21.04.2010
தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மதுரை, ஏப். 20: மதுரையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை தொழிலாளர் ஆய்வாளர் என்.கோவிந்தன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன் விதிகள் 1948 விதி 15}ன்படி அனைத்துக் கடைகள் மற்றும் பிற நிறுவனங்களும், பெயர்ப் பலகைகளை தமிழில் எழுதியிருக்க வேண்டும்.
பிற மொழிகளை பெயர்ப் பலகையில் பயன்படுத்த விரும்பினால், பெயர்ப் பலகையின் மேல்பகுதியில் தமிழில் பெரிய எழுத்துக்களில் எழுதி, அதன்கீழ் பிற மொழிகளில் எழுதலாம் என விதி உள்ளது.
தமிழ்நாடு அரசு செம்மொழி மாநாட்டை நடத்தும் நிலையில் அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தத்தமது பெயர்ப் பலகைகளை சட்ட விதிகளின்படி அமைக்க வேண்டும்.
விதிகளுக்கு உள்பட்டு பெயர்ப் பலகைகளை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களை தொழிலாளர் துறை ஆய்வாளர்களின் ஆய்வின்போது கண்டறிந்தால், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள்படி வழக்குத் தொடரப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.