தரமற்ற பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருவண்ணாமலை பேருந்து நிலையக் கடைகளில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில், 40 மைக்ரான் திறனுக்கு குறைவான 13 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக் கடைகளில் தரமற்ற பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சுகாதார ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், எஸ்.வினோத்கண்ணா மற்றும் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
அப்போது, 10 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 13 கிலோ தரமற்ற பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 10 கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, நகராட்சி சார்பில் வழங்கப்படும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப் பைகளை கடைக்காரர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.
ஆணையர் எச்சரிக்கை: இதுபோன்ற அதிரடி ஆய்வுகள் அடிக்கடி தொடரும். 40 மைக்ரான் திறனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை சேமித்து வைத்தாலோ, விற்பனை செய்தாலோ ரூ.500 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து 40 மைக்ரானுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்து சைக்கிளில் விநியோகிப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவ்வாறு விற்பனை செய்பவர்களைப் பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, நகராட்சிப் பகுதியில் தரமற்ற பிளாஸ்டிக் பைகள் விற்பனையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.
செய்யாறு: செய்யாறு நகராட்சிப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய குளிர்பானக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் தலைமையில், சமுதாய அமைப்பாளர் சு.ந.அம்பேத்கர் மற்றும் ஊழியர்கள் நகராட்சி எல்லைக்குள்பட்ட பஸ் நிலையம், மார்க்கெட், காந்தி சாலை ஆகிய பகுதியில் உள்ள குளிர்பானக் கடைகளிலும், குளிர்பானம் தயாரிக்கும் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கடைகளில், தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.6 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
போளூர்: போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாத் தலைமையில், செயல் அலுவலர்கள் மோகன்ராஜ் (செங்கம்), தாமோதரன் (கீழ்பொன்னாத்தூர்), கணேசன்(வேட்டவலம்), அண்ணாதுரை (புதுப்பாளையம்) ஆகியோர், போளூர் பஜார் வீதியில் உள்ள மளிகைக் கடைகள், ஸ்வீட் கடைகள், திருமண மண்டபங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இதில், தடைசெய்யப்பட்ட 7 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 பேரிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.