தருமபுரி கடைகளில் நகராட்சி அலுவலர்கள் சோதனை
தருமபுரியில் பல்வேறு கடைகளில் நகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருள்க பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) குருசாமி ஆலோசனையின் பேரில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நகரக் கடைகளில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
ராஜகோபால் கவுண்டர் பூங்கா தெரு, முகமது அலி கிளப் சாலை, சித்த வீரப்ப செட்டி தெரி, பி.ஆர். சீனிவாசன் தெரு, சின்னசாமி நாயுடு தெரு, நாச்சியப்பா வீதி, சேலம் புறவழிச் சாலை ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வணிக வளாகம், பல்பொருள் அங்காடி, ஹோட்டல், மளிகைக் கடை, பெட்டிக் கடை, டீ கடை, உணவுப் பொருள் விற்பனையகங்கள் என பல்வேறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, அந்தந்தக் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் எச்சரித்தனர்.