தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சாக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சாக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வார்டுக்குள்பட்டது வட்டார வளர்ச்சி காலனி. இந்த காலனிப் பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துதருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மேலும், இந்த வார்டுக்குள்பட்ட பிரதான பகுதியாக உள்ள உழவர் சந்தை, தருமபுரி- கிருஷ்ணகிரி சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றவும், சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி மக்களும், வார்டு உறுப்பினர் எம். சந்திரா முருகன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சாலையோரத்தில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டுப்பட்டிருந்த கட்டுமானங்கள் அனைத்தும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர், பொக்ளின் மூலம் சாக்கடையை தூர்வாரி அதிலிருந்த கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக, நகராட்சி வார்டு உறுப்பினர் எம். சந்திரா முருகன் கூறியது:
9-வது வார்டுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், நகர்மன்றத்தில் வெளிநடப்பு செய்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தோம். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சாக்கடையும் தூர்வாரப்பட்டுள்ளது. இதேபோல, அவ்வப்போது சாக்கடையை சுத்தம் செய்து, குப்பைகள், கழிவுகள் தேங்காமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.