தினமலர் 19.01.2010
தர்மபுரி மாவட்டத்தில் இன்று வளர்ச்சிப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடக்கும் அரசு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பல லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, பென்னாகரத்தில் அரசு திட்ட துவக்க விழா இன்று ஜன., 19ல் நடக்கிறது. அதற்காக சென்னையில் இருந்து வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 9 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 55 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மற்றும் மாணவர் தங்கும் விடுதியை திறந்து வைக்கிறார். 43 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மாலை 4 மணிக்கு பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளி முள்ளுவாடி அண்ணாதுரை திடலில் நடக்கும் விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் கனகசபை வரவேற்கிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் சுப்புராஜ் திட்ட விளக்கவுரை அளிக்கிறார். கலெக்டர் அமுதா முன்னிலை வகிக்கிறார். பென்னாகரம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும், மகளிர் குழுவினருக்கு கடன் உதவி வழங்கியும், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் பேசுகிறார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அரசு நலத்திட்ட உதவி வழங்குகிறார். “108′ ஆம்புலன்ஸ் சேவையையும் அவர் துவக்கி வைக்கிறார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். ஒகேனக்கல்லில் அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வு கூட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி தர்மபுரி மற்றும் பென்னாகரம் பகுதியில் எஸ்.பி., சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி.,க்கள் பஞ்சவர்ணம் (பென்னாகரம்), சாகுல்ஹமீது (தர்மபுரி) உள்ளிட்ட மூன்று டி.எஸ்.பி.,க்கள் 25 இன்ஸ்பெக்டர்கள் 60 எஸ்.ஐ.,க்கள், 470 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ள முக்கிய சந்திப்பு சாலைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.