தினமலர் 08.04.2010
தர்மபுரியில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தல்
தர்மபுரி: ‘தர்மபுரி நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்‘ என, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார். தர்மபுரி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் அண்ணாதுரை, இன்ஜினியர் மோகன், மேனேஜர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: நாட்டான்மாது (தி.மு.க.,): கோடை காலம் துவங்கி விட்டதால், நகரப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா: நகரப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் பஞ்சப்பள்ளி அணையில் தற்போது 16 அடி தண்ணீர் உள்ளது. மே, ஜூன் மாதம் வரையில் இந்த தண்ணீரை வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதன் பின் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை. குடிநீரை பொதுமக்கள் கோடை காலத்தை கருத்தில் கொண்டு சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும்.
வேணுகோபால் (காங்.,): எனது 21வது வார்டில் இலவச கலர் ‘டிவி‘க்கள் இது வரையில் வழங்கப்படவில்லை.
ஆனந்தகுமார் ராஜா: கலர் ‘டிவி‘, இலவச காஸ் அடுப்புகள் வழங்காத பகுதிகள் குறித்து கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, இலவச பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலசுப்பிரமணியன்: கோடை வெயில் தாக்கி வருகிறது. நகரப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தகுமார் ராஜா: தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவி (அ.தி.மு.க.,): 33வது வார்டில் குடிநீர் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தகுமார் ராஜா: அந்த மோட்டார் பழையதாக இருந்தால், புதிய மோட்டார் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்திரமோகன் (தி.மு.க.,): தர்மபுரி நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கவுன்சிலர்கள் கல்வி கடன் கேட்டு பரிந்துரை செய்தால், கடன் வழங்குவதில்லை. குறிப்பாக 90 சதவீதம் மதிப்பெண் எடுத்து மாணவர்களுக்கு கூட கல்வி கடன் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
ஆனந்தகுமார் ராஜா: இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர் பார்வைக்கு எடுத்து சென்று கல்வி கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.