தினமணி 05.03.2013
தாய்-சேய் நல விடுதி கட்டும் பணி:நகராட்சித் தலைவர் ஆய்வு
திருவள்ளூரில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தாய்-சேய் நல விடுதிப் பணிகளை நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் சிவி. நாயுடு சாலை ராஜம்மாள்தேவி பூங்கா அருகே நகராட்சி சார்பில் புதிதாக ரூ.10 லட்சம் செலவில் தாய்-சேய் நல விடுதி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் திடீரென ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் நீலநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் நகராட்சி சார்பில் வி.எம்.நகர் பகுதியில் ரூ.34 லட்சம் செலவில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையையும் அவர் பார்வையிட்டார்.