தாராபுரம் நகராட்சி முன் ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் இடிப்பு
தாராபுரம் நகராட்சி முன் இடியும் நிலையில் இருந்த ஓட்டலை நகராட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
தாராபுரம் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆபத்தான கட்டிடம்
தாராபுரம் நகராட்சி நுழைவு வாயிலை ஒட்டி 700 சதுர அடி பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நூலகமாக செயல்பட நகராட்சி அனுமதி அளித்திருந்தது. அதன்படி நூலக வரியாக ஆண்டுக்கு ரூ.1250 செலுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த நூலக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த தனிநபர் அதில் நூலகம் நடத்தாமல் அதை ஓட்டலாக மாற்றி வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு இருப்பதும், இதற்கு தினமும் வாடகையாக ரூ.450 வசூல் செய்து வந்ததும், முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்று இருப்பதும், மேலும் ஓட்டல் அருகே பெட்டிக்கடை நடத்த ரூ.20 ஆயிரம் முன்பணம் வாங்கி, பெட்டிக்கடைக்கு தினமும் ரூ.50 வாடகை வசூல் செய்து வந்திருப்பதையும் நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கட்டிடம் இடிப்பு
மேலும் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதாகி இடிந்து விழும் நிலையில் இருந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஓட்டலை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீசு அனுப்பியது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் ஓட்டலின் உள்பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.
எனவே மேலும் தாமதித்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என கருதி, நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், உத்தரவின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த ஓட்டலை இடித்து தள்ளினார்கள். இதையடுத்து அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி அம்மா உணவகம் திறக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.