தினமலர் 20.11.2010
திண்டுக்கல்லில் மலேரியா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள கொசுக்களால் மலேரியா பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறாததால் பல வார்டுகளில் ஆள் விழும் அளவிற்கு பள்ளங்கள் உள்ளன. மழை நீர் இப்பள்ளங்களில் குளம்போல் தேங்கியுள்ளது. இதுதவிர நகரில் முக்கிய குளங்கள் கொசு உற்பத்தி தலமாக உள்ளது. மலேரியா: கடந்த செப்டம்பரில் 42 பேரும், அக்டோபரில் 77 பேரும் இம்மாதத்தில் இதுவரை 7 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடவடிக்கை: நகராட்சி சுகாதார அதிகாரி வரதராஜன் கூறுகையில்,”48 வார்டுகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர் தலைமையில் 21 பேர் கொண்ட சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் மேல்நிலை தொட்டிகளில் மருந்து ஊற்றுதல், மிஷின் உதவியால் புகை மருந்து தெளித்தல் போன்ற மலேரியா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்,’என்றார்.