தினத்தந்தி 21.11.2013
திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர்
கழிக்க தடை, மீறினால் உடனடி அபராதம் ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில்
திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால்
உடனடி அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை
விடுத்து உள்ளார்.
மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்
மாநகராட்சி மேயர் ஜெயா, ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக் ஆகியோர்
நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ரூ.13½ லட்சம் மதிப்பீட்டில்
நம்ம கழிவறை கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டனர். மேலும் 11 லட்சம்
செலவில் கண்காணிப்பு கோபுரம் கட்டுமான கட்டிட வேலைகளையும் பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆணையர் தண்டபாணி கூறியதாவது:–
சிறுநீர் கழிக்க தடை
மத்திய பஸ் நிலையத்தில் ஏற்கனவே 2
இடங்களில் ஆண்களுக்காகவும், ஒரு இடத்தில் பெண்களுக்காகவும் இலவச கழிவறைகள்
பயன்பாட்டில் உள்ளன. மேலும் 3 இடங்களில் கட்டண கழிவறைகளும் உள்ளன. இவை
அனைத்தும் மைக்ரோ ஆர்கனிசம் என்னும் தண்ணீர் கலந்த மருந்து தெளிப்பின்
மூலம் துர்நாற்றம் இல்லாத வகையில் பராமரிக்கப்பட உள்ளன. எனவே மத்திய பஸ்
நிலையத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை காத்திட திறந்த வெளியில் சிறுநீர்
கழிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி தொடர்ந்து மத்திய
பேருந்து நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம்
அபராதம் வசூலிக்கப்பட்டு அந்த இடத்திலேயே ரசீதும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.