தினமணி 11.06.2010
திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
சிவகாசி,ஜூன்10: சிவகாசி வட்டம், திருத்தங்கல் மூன்றாம் நிலை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி செயல் அலுவலர் எஸ். கௌதம் வியாழக்கிழமை கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
திருத்தங்கல்–ஆலமரத்துப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே எடுக்கப்பட்டு விட்டது. விரைவில் அப்பகுதி ஆக்கிரமிபுக்கள் அகற்றப்படும் என்றார். வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 6 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாள்களில் இவை செயல்படத் துவங்கும்.
7-வது வார்டு வேலவன் நகர், 13-வது வார்டு கே.கே .நகர், 8-வது வார்டு கண்ணகிகாலனி, 4-வது வார்டு முத்துமாரி நகர், 118-வது வார்டு சுக்கிரவார்பட்டி சாலை மற்றும் 21-வது வார்டு ஆகிய பகுதிகளில் இவை அமைக்கப்பட்டுள்ளது. திருத்தங்கல் நகராட்சிக்கு மானூர் குடிநீர் பத்து நாளைக்கு ஒருமுறை 16 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.
ஆணைகுட்டம், பெரியகுளம் கண்மாய், தாழோடை ஆகியவைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு 12 வார்டுகளுக்கும் தினசரி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 9-வது வார்டுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படுகிறது.
குப்பைகளை கொட்டுவதற்குஇடமில்லாத நிலை உள்ளது. குப்பைகளை கொட்டுவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நகரை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் அவர்.