தினகரன் 18.11.2010
திருவண்ணாமலை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவுதிருவண்ணாமலை, நவ. 18: திருவண்ணாமலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நேற்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.செந்தில்குமார், கலெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருமஞ்சன கோபுரத் தெரு, செங்கம் சாலை ஆகிய இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை ஆய்வு செய்த நிர்வாக இயக்குனர், உடனடியாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் கழிவறை வசதி, மின் விளக்கு வசதி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை முழுமையாக நகராட்சி சார்பில் செய்துத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, நகராட்சித் தலைவர் இரா.திருமகன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை, மண்டல இயக்குனர் எஸ்.பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.