தினமணி 15.03.2010
திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகனமேடைப் பணிகள் முடிவடைந்தன
திருவண்ணாமலை, மார்ச் 14: திருவண்ணாமலை நகராட்சி சார்பில் ரூ.54 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் நவீன மின்சார மயானம் அமைக்கப்பட்டது. அதே போல் திருவண்ணாமலையிலும் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி ரூ.54 லட்சம் செலவில் ஈசான்ய மைதானம் அருகே நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.
நவீன தகனமேடையின் பராமரிப்பை ஒரு குழு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் ரோட்டரி சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நகராட்சி அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சடலத்தை எரிக்க குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் தகனம் முடிந்து விடும்.