தினகரன் 05.02.2010
திருவள்ளூர் நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும்
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் நகரமன்ற கூட்ட அரங்கம் ரூ.20 லட்சம் செலவில் புதுக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கை இ.ஏ.பி.சிவாஜி எம்எல்ஏ திறந்து வைத்தார். பின்னர், நகரமன்ற கூட்டம், அதன் தலைவர்பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையர் முத்து ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருவள்ளூர் நகரம் மாவட்டத்தின் தலைமையிடமாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. ஏராளமான தொழிற்சாலைகளும், தனியார் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இதனால், நகராட்சியை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் ஓட்டல்கள் மற்றும் தெருவோர கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேப்பர் பொருட்களை பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.