தினமலர் 15.05.2010
திருவாரூர் நகராட்சிக் கூட்டம்
திருவாரூர்: திருவாரூர் நகராட்சி கூட்டம் தலைவர் தென்னன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி பராமரிப்பில் உள்ள 7 பள்ளிகளில் 43 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகளை கல்வி நிதியில் இருந்து மேற்கொள்வது. தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்சார உபகரணங்கள் வாங்குவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நடந்த விவாதம்:
தலைவர்: நகராட்சியில் அனைத்து பணிகளும் பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகிறது. மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் வார்டு தொடர்பான பணிகளை தான் நிறைவேற்றி வைக்கிறோம்.
ஆர்.டி.மூர்த்தி: வடக்கு வீதியில் சாலையில் உள்ள மண் பவுடரை விட மெலிதாக உள்ளது. இந்த மண்ணால் ஏற்படும் தூசியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதையடுத்து அவர் பையில் கொண்டு வந்திருந்த மண்ணை காண்பித்தார்.
மடப்புரம் சம்பத்: திருவாரூர் நகரில் பொதுமக்களுக்கு எந்தவித பட்டாவும் கிடைக்கவில்லை.
யூசுப்: எனது வார்டில் எந்த வேலையும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக எனது வார்டு மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
பொறியாளர்: எவ்வித காழ்ப்புணர்வும் இல்லாமல் பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
கலைவாணி: எனது வார்டில் குடிநீர் வசதி சரியாக இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து அவர் பாட்டிலில் கொண்டு வந்த குடிநீரை மன்றத்தில் காண்பித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது. துணைத்தலைவர் சங்கர், கவுன்சிலர்கள் கஜாலி, ஜெயமணி, டி.செந்தில் மயில்வாகனன், ஆணையர் சரவணன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.