தினமலர் 09.09.2010
திறந்த வெளி நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது
சென்னை : தனியார் நிறுவனத்தின் உபயோகத்தில் இருந்து, 23 கிரவுண்டு நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தனியார் உபயோகத்தில் உள்ள, மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்த வெளி நிலங்களை மாநகராட்சி கையகப்படுத்தி பூங்காக்கள், விளையாட்டு திடல்களை அமைக்கிறது. அதுபோல் மேயர் சுப்ரமணியன் வார்டான 140 கிண்டி ஜவர்கர்லால் நேரு சாலையில், ஒலிம்பியா டெக்னாலஜி பார்க் கட்டடத்தின் திறந்தவெளி இடமாக, மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15.32 கிரவுண்டு நிலத்தில் பூங்கா அமைத்து பராமரித்து வந்தனர்.
அந்த இடத்தை கையகப்படுத்த மாநகராட்சி முறைப்படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. நேற்று மேயர் முன்னிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளிநிலத்தை அளந்து 15.32 கிரவுண்டு நிலத்தை கையகப்படுத்தி, “மாநகராட்சிக்கு சொந்தமான இடம்‘ என்ற அறிவிப்புப் பலகை நடப்பட்டது. அதுபோல் அதே பகுதியில் தாமரை டெக் பார்க் கட்டடத்தில் ஒதுக்கப்பட்டிருந்த 7.57 கிரவுண்டு திறந்தவெளி நிலத்தையும் மாநகராட்சி கையகப்படுத்தி அறிவிப்புப் பலகை வைத்தது.
இது குறித்து மேயர் கூறியதாவது: கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் ஏறத்தாழ மூன்றாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.