தினமலர் 10.03.2010
திறந்தவெளியில் கேபிள்: மாநகராட்சி எச்சரிக்கை
கோவை : “கோவை நகரில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள டெலிபோன் கேபிள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதன கேபிள்களை, சம்மந்தப்பட்ட நிறுவனங்களே ஒரு வாரத்தில் அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கேபிள்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ என, மாநகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா அறிக்கை: கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு நகரில் சாலைகள், சாலையோர பூங்கா, நடைபாதைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளுக்கான கேபிள் மற்றும் தொலைக்காட்சி கேபிளை நிலத்தடியில் பதிக்கவும், உயர் மட்ட கேபிள்களை அகற்றிக் கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டில் நவம்பர், டிசம்பரில் அறிவுறுத்தப்பட்டது. இரண்டு மாத கால அவகாசத்துக்குள் பணிகளை துவக்கி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், எந்த நிறுவனங்களும் பணிகளை நிறைவு செய்யவில்லை என்றும், சாலைகளில் திறந்தவெளியிலேயே கேபிள்களை கொண்டு செல்கின்றன என்றும் தகவல்கள் வந்துள்ளன.
இன்னும் சில நிறுவனங்கள், கேபிள் பதிக்க தோண்டிய குழியை அப்படியே விட்டு வைத்திருப்பதாகவும் புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு வாரத்துக்குள் உயர்மட்ட கேபிள்களை அகற்றிக்ககொள்ள வேண்டும். புதிய கேபிள்களை தேவையுள்ள சாலைகளில், நிலத்தடியில் பதிக்க வேண்டும். தவறினால், எச்சரிக்கையை மீறிய நிறுவனங்களின் உயர்மட்ட கேபிள்கள், மாநகராட்சியால் அகற்றப்படும். தவிர, புதிய ரோடுகளில் வருங்காலத்தில் கேபிள் பதிக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது.இவ்வாறு, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.