தினமலர் 09.02.2010
தீவிர கொசு ஒழிப்பு திட்டம்: விருதுநகரில் துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு திட்டத்தில் விருதுநகர் ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. தமிழகத்தில் தீவிர கொசு ஒழிப்பு திட்டத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் ஒன்றியம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
கணக்கெடுப்பு: விருதுநகர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்துள் ளது. நல்ல நீர் நிலைகளில் அனாபிலஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். அசுத்தமான நீரில் க்யூலக்ஸ் வகை கொசு உற்பத்தியாகும். டெங்கு, சிக்–குன் குனியா நோய் பரப்பும் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வளரும் மரங்கள், சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், தேவையற்ற பொருள்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தொல்லை தரும் கொசுக்கள் உற்பத்தியாகும். கழிவு நீர் தொட்டிகளிலும் உருவாகும். தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக கொசுப்புழுவின் அடர்த்தி, முதிர் கொசுவின் அடர்த்தி, கொசுக்களின் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.
பயிற்சி: கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடவுள்ள கிராம சுகாதார மற்றும் துப்புரவு குழுக்களுக்கும், மாணவர்களுக்கும் கொசு ஒழிப்பு குறித்தும், அது உருவாகும் இடங்களை அழித்தல், அப்புறப்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. கொசு உற்பத்தியாகும் இடத்தில் அபேட் மருந்து தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி மூன்று மாத காலத்திற்கு நடக்கவுள்ளது.
துவக்க விழா: தீவிர கொசு ஒழிப்பு திட்டம் ரோசல்பட்டி ஊராட்சித்தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். ஒன்றிய சேர்மன் சீனிவாசகன்,துணை இயக்குனர் வடிவேலன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன் மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.