தினமலர் 10.02.2010
துப்புரவு தொழிலாளர்களுக்காக போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
கோவை : மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் ஆண், பெண் இருபாலரும் மது மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தால், அவர்களை மீட்பதற்காக போதை மறுவாழ்வு மையம் கோவை நகரில் புதியதாக துவக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 ஆயிரத்து 935 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் 141 பேர் மது மற்றும் தீவிர போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது தெரியவந்தது. இவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்பதற்காக மாநகராட்சி 50 வது வார்டுக்குட்பட்ட லாலிரோட்டில் உள்ள துணை மகப்பேறு மருத்துவ மையம், போதை மறுவாழ்வு மையமாக மாற்றியமைக்கப்பட்டது. இவர்களுக்கு முதல்கட்டமாக மாநகராட்சி டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் மிகவும் மோசமான நிலையிலிருக்கும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுமாநகராட்சி போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு அன்றாடம் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்கள் வெளியேறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு கருதி இரு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாநகராட்சி டாக்டர்கள், இரண்டு நர்ஸ்கள், இரண்டு மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவ சிகிச்சையளிப்பதோடு, அவர்களோடு கலந்துரையாடி மனிதனின் குணத்தையும், மனதையும் மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இம்மையத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களின், பழைய வாழ்வை மீட்க மாநகராட்சி நிர்வாகம் போராடி வருகிறது.