துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நகரம் தூய்மையாக இருக்கும் என்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம், தெற்கு ரோட்டரி சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன், சுகாதாரக் குழுத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார்.
முகாமை துவக்கி வைத்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:
மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நகரம் தூய்மையாக இருக்கும். முகாமில் பரிசோதனை செய்து கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனைகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையில் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை செய்து கொள்ளலாம்.இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் ரூ.6,500 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துப்புரவுப் பணியாளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரமான நகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மண்டலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி நகரமைப்பு நிலைக் குழுத் தலைவர் ஆர்.அன்பகம் திருப்பதி, மாநகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.