தினமணி 08.10.2010
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
பரமக்குடி, அக். 7: பரமக்குடி நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்கும் விதமாக, அதனைக் கட்டுப்படுத்த அந் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தெரு நாய்கள் பொதுமக்களைக் கடித்தும், பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தி வந்தன. இதனைக் கட்டுப்படுத்த நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்து வந்தனர்.
இதனை ஏற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், விலங்குகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன், ஜூலி பிராணிகள் நலச் சங்கம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முதற்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மாதம் ஒருமுறை விடுபட்ட நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் கே. அட்ஷயா தெரிவித்தார்.