தினமலர் 27.12.2013
தெரு நாய்தொல்லையை கட்டுப்படுத்த அமைச்சர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரி: தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, காப்பகம் அமைப்பது தொடர்பாக நகராட்சி பரிசீலித்து வருகிறது. புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய் தொல்லை உச்சகட்டத்தில் உள்ளது.
இதனால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை, உள்ளாட்சித் துறை பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அசோக் ஆனந்த், கலெக்டர் தீபக்குமார், கால்நடை துறை இணை இயக்குனர் கணேசன், நகராட்சி ஆணையர்கள் ராஜமாணிக்கம், அழகிரி, டாக்டர்கள் அனந்தராமன், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசும்போது “”தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அதே இடத்தில் விட வேண்டும். விஷம் வைத்து கொல்வது, சுருக்கு வலைபோட்டு பிடிப்பது போன்ற கொடூரமான முறையில் கொல்வதை கைவிட வேண்டும் என்றனர்.நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் பேசும்போது, “”தெருவில் மக்களை அச்சுறுத்தும் நாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க நகராட்சி சட்டத்தில் இடம் உள்ளது.
இதன் மூலம் தெருக்களில் நாய்கள் திரிவது தடுக்கப்படும். நாய்களும் பாதுகாக்கப்படும் என்றார்.இருப்பினும் இந்த திட்டத்திற்கு தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தெரு நாய்களை கட்டுப்படுத்த நாய் காப்பகம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.