தேசிய அடையாள அட்டைக்கு பதிவு முகாம் இன்று தொடக்கம்
மதுரை மாநகராட்சி 80 முதல் 84 ஆவது வார்டுகள் மற்றும் வார்டு 64 பகுதிகளில் தேசிய அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுத்தல் மற்றும் பதிவு முகாம் மார்ச் 9 முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுத்தல் மற்றும் பதிவு முகாம் வார்டுகள் வாரியாக நடைபெறுகிறது. 2013 ஆம் ஆண்டு புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு இந்த தேசிய அடையாள அட்டையைக் கொண்டு கணக்கெடுப்பு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
வார்டு 80 முதல் 82-க்குள்பட்ட பகுதிகளில் மார்ச் 9 முதல் 13 ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறுகின்றன. வார்டு 80-க்கு திருவிக சாலை மங்கையர்க்கரசி நடுநிலைப் பள்ளி, மணி நகரம் தொழிலாளர் நலச்சங்க மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், வார்டு 81-க்கு கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய இடங்களிலும், வார்டு 82-க்கு சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, தைக்கால் 1 ஆவது தெரு சமுதாயக்கூடத்திலும் முகாம்கள் நடைபெறும்.
வார்டு 83-க்கு மார்ச் 14 முதல் 18 ஆம் தேதி வரை வடக்குமாசி வீதி டிஎம்ஆர் மேல்நிலைப் பள்ளி, மணியம்மை ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
வார்டு 84-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, வடக்கு ஆவணி மூல வீதி மாநகராட்சிப் பள்ளி, வடக்கு ஆவணி மூல வீதி பொன்னு அய்யங்கார் பள்ளி ஆகிய இடங்களிலும், வார்டு 66-சொக்கிகுளம் பகுதிக்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மறைமலை அடிகளார் மாநகராட்சிப் பள்ளி, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
முகாம்களில் பதிவுக்கு செல்வோரின் புகைப்படம், கைரேகை மற்றும் கண்ணின் கருமணிகள் ஆகியவை கணினி மூலம் பதிவு செய்யப்படும். குடும்பத்திலுள்ள 5 வயதுக்குள்பட்ட அனைவரும் இப்பதிவை செய்து கொள்ள வேண்டும்.
முகாமுக்கு செல்வோர் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட குடும்ப ஒப்புகைச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.